tvs group ani
இந்தியா

TVS குடும்பத்தில் சொத்துத் தகராறு.. பாகப்பிரிவினை கோரி மகள் நோட்டீஸ்.. ஆதரவாகக் களமிறங்கிய தாய்!

TVS குழுமக் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. தனது தந்தையிடம் குடும்பச் சொத்துகளைப் பிரித்துத் தரக் கோரி மகள் முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அப்படி TVS குடும்பத்தில் என்னதான் பிரச்னை? பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

'Made in Tamil Nadu' என்றதும் பலரது நினைவுக்கு வருவது TVS நிறுவனம்தான். தமிழகத்தில் தொடங்கி, உலகம் முழுவதும் பிரபலமடைந்த தொழில் நிறுவனங்களில் ஒன்றாக TVS திகழ்கிறது. இந்தியாவின் பழமையான தொழில் குடும்பங்களில் ஒன்றான TVS குடும்பம், ஆட்டோமொபைல், வாகன உதிரிபாகங்கள், நிதிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ளது. இந்த குழுமத்தின் நிர்வாக தலைவராக இருந்த வேணு சீனிவாசனுக்கு சுதர்சன் வேணு என்ற மகனும், லட்சுமி வேணு என்ற மகளும் உள்ளனர். இருவரும் TVS குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இந்நிலையில், TVS குழுமத்துடன் தொடர்புடைய குடும்பச் சொத்துகளில் தனது சகோதரருக்கு அதிகப்படியான பொருளாதார உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தனக்குரிய பங்கு மறுக்கப்படுவதாகவும் லட்சுமி வேணு குற்றம்சாட்டியுள்ளார்.

venu srinivasan

நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பது மட்டுமே குடும்பச் சொத்துகளின் உரிமையைத் தீர்மானிக்காது எனக் குறிப்பிட்டுள்ள அவர், தனக்குச் சட்டப்படி உரிய பங்கைச் சமமாகப் பிரித்துத் தர வேண்டும் என்று கோரியுள்ளார். இதற்காக, தனது தந்தையான வேணு சீனிவாசனுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், 1956-ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டம் மற்றும் 2005-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைச் சுட்டிக்காட்டியுள்ள லட்சுமி வேணு, குடும்பச் சொத்துகளில் மகள்களுக்கும் மகன்களுக்கு இணையான உரிமை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, குடும்பச் சொத்துகளில் தனக்குரிய சட்டப்பூர்வமான பங்கைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, லட்சுமி வேணுவின் கோரிக்கைக்கு அவரது தாயார் மல்லிகா சீனிவாசன் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். மகனுக்கும் மகளுக்கும் குடும்பச் சொத்துகளில் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், குடும்ப உறுப்பினர்களிடையே சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் தொடங்கி உலகளவில் புகழ்பெற்ற TVS குடும்பத்தில், தற்போது சொத்துப் பங்கீடு தொடர்பான பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

tvs

இதுதொடர்பாக, லட்சுமி வேணு தரப்பு வழக்கறிஞரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் கூறுகையில், லட்சுமி வேணுவின் தரப்பு தெரிவிப்பதன்படி, TVS நிறுவனம் சுந்தரம் ஐயங்காரால் தொடங்கப்பட்டு, அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கைமாறி வந்துள்ளது. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக வந்த குடும்பச் சொத்துகளில் சில தற்போது வேணு சீனிவாசனின் குடும்பத்திடம் உள்ளன. ஆனால், அந்தச் சொத்துகள் முறையாகப் பிரிக்கப்படாமல், குடும்ப உறுப்பினர்களுக்கு நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் 1989-ஆம் ஆண்டிலேயே ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில்தான் லட்சுமி வேணு தனது பங்கைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.