75 வயதாகும் வி.எஸ்.பாபு ஒரு காலத்தில் வடசென்னை திமுகவில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் எனக் கூறப்படுகிறது. வடசென்னை மாவட்ட திமுக செயலாளராகப் பதவி வகித்த இவர், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இதற்கிடையே, 2011ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டதால், வி.எஸ்.பாபுவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஸ்டாலினின் வெற்றிக்காக அவர் தீவிரமாகப் பணியாற்றியதாகத் தெரிகிறது. அந்தத் தேர்தலில் ஸ்டாலின் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். இதற்குப் பிறகு கட்சியில் வி.எஸ்.பாபுவின் முக்கியத்துவம் குறைந்து, அவர் ஓரங்கட்டப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேகர்பாபு திமுகவில் இணைந்த பிறகு, அவருக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த வி.எஸ்.பாபு, 2011ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு திமுகவில் இருந்து விலகி 2016ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவிலும் அவருக்கான முக்கியத்துவம் குறைந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, 2018ஆம் ஆண்டு வி.எஸ்.பாபு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்த அவர், பின்னர் அக்கட்சியிலிருந்தும் விலகினார். தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து வி.எஸ்.பாபு களம் கண்டார். இந்தத் தேர்தலில் ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஸ்டாலினையே தோற்கடித்ததால், வி.எஸ்.பாபுவின் வெற்றி தேசிய அளவில் கவனம் பெற்றது. இதையடுத்து கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சுவாசத் தொற்று மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கிடையே, செப்டம்பர் 23ஆம் தேதி முதல்வர் விஜய் மருத்துவமனைக்குச் சென்று வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்ததாகச் செய்திகள் வெளியாகின.
இதற்கிடையே, வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து அடுத்தகட்டமாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்த பல்வேறு கேள்விகளும், அரசியல் வட்டாரங்களில் விவாதங்களும் எழுந்தன.
இந்தச் சூழலில், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து சட்டப்படி வெளியிடக்கூடிய தகவல்களை வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கடந்த 72 நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு இன்று மதியம் 2.24 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். முதல்வர் விஜயும் வி.எஸ்.பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மருத்துவமனைக்கு வருகை தர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வி.எஸ்.பாபுவின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.