இந்தியா

‘டிக்டாக்’ விபரீதம் - கழுத்து எலும்பு முறிந்த இளைஞர் வீடியோ

webteam

டிக் டாக் வீடியோவுக்காக பேக்பிலிப் ( backflip)  முயற்சி செய்த இளைஞர் ஒருவர் கழுத்து எலும்பு முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ‘டிக்டாக்’ செயலியில் வீடியோக்களை லிப் சிங் செய்து பாடலுக்கு ஏற்ப நடித்து, நடனமாடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் அதிக லைக், ஷேர்களை பெற வேண்டும் என்பதற்காகவும், பயனர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்படி டிக் டாக் வீடியோவுக்காக பேக்பிலிப்  பேக்பிலிப் எனப்படும் பின்புறமாக குதித்தலுக்கு முயற்சி செய்த இளைஞர் ஒருவர் கழுத்து எலும்பு முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கர்நாடகாவின் துமகூரு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் குமார். இவர் டிக் டாக்கில் வீடியோ பதிவிடுவதற்காக நண்பரின் உதவியுடன்  பேக்பிலிப் எனப்படும் பின்புறமாக குதித்தலில் ஈடுபட்டார். ஆனால் கால்களை தரையில் ஊன்ற முடியாமல் அவர் தடுமாறியதில் அவரது தலை நேரடியாக தரையில் மோதியது. இந்த விபத்தில் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு உடைந்தது. உடனடியாக குமார் அருகில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குமாரின் முதுகெலும்பு முழுவதையும் ஸ்கேன் செய்துள்ள மருத்துவர்கள் தற்போதைக்கு அவரின் நிலைமை குறித்து எதுவும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் முதுகெலும்புதான் உடலுறுப்புகளின் செயல்பாட்டுக்கு முக்கிய ஆதாரம் என்பதால் குமாரின் எதிர்காலமே முடங்கி போகும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இது போன்ற விபத்துகள் முதல்முறை இல்லை என்றும், சமூக வலைத்தளங்களில் வித்தியாசமாக வீடியோ பதிவேற்ற வேண்டுமென்பதற்காக இளைஞர்கள் உயிரையும் பணயம் வைக்கும் ஆபத்தான போக்கு அதிகரித்து வருவதாகவும் என கூறப்படுகிறது.