தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுப்பதற்கு அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த மாதம் 16 ஆம் தேதி போலீசாரிடம் பிடிபட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் இந்த தகவல் வெளியானது. சுகேசிடம் இருந்து 1.30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவன் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் யார் - யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற தகவலைக் கூறினார். இதையடுத்து கடந்த மாதம் 25 ஆம் தேதி அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணைக்காக அவரும், சுகேஷும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் டிடிவி தினகரன் சார்பாக ஜாமீன் கேட்டு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.