இந்தியா

வைகுண்ட ஏகாதசி முதல் உயர்கிறது திருப்பதி லட்டு விலை?

jagadeesh

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் மானியம் வரும் வைகுண்ட ஏகாதசி முதல் ரத்து செய்யப்படுவதால் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு விலை உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதமும் உலக பிரசித்தி வாய்ந்ததாகும். ஆனால், இந்த லட்டு பிரசாதத்தை தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூடுதலாக செலவிடுகிறது. ஒரு லட்டு பிரசாதம் தயார் செய்ய திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.38 செலவாகிறதாக கூறப்படுகிறது.

தற்போது நடைப்பயணமாக மலையேறி வரும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்கப்படு வருகிறது. அத்துடன் இலவச தரிசனத்திலும், மலையேறி வரும் பக்தர்களுக்கும் சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சலுகை விலையில் லட்டுகள் வழங்கப்படுவதால் ஆண்டுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நஷ்டத்தை சரிக்கட்ட சலுகை விலையில் லட்டுகள் வழங்கும் நடைமுறையை ரத்து செய்து அதற்கு பதிலாக, அனைத்து தரிசன பக்தர்களுக்கும் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கவும். அதற்குமேல் கூடுதல் லட்டுகள் தேவைப்படுபவர்களுக்கு ஒரு லட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யவும் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி முதல் இதனை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.