ஜி7 உச்சி மாநாட்டுக்குப் பின் ஈரான் அதிபர் ஹஸன் ரவுஹானியை சந்திக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பை ஏற்று, பியாரிட்ஸில் நடந்த ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜாரிஃப் திடீரென கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, ஈரானின் அணு திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன், அமெரிக்கா மற்றும் ஈரான் அதிபர்கள் ஒரு சில வாரங்களில் நேரடியாக சந்தித்து அணு திட்டம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் உருவாகும் எனத் தெரிவித்தார்.
அப்போது உடனிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அதற்கான சரியான சூழல்கள் உருவானால் நிச்சயம் ஈரான் அதிபரை சந்திக்க தயாராகவே இருப்பதாக கூறினார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஈரானுடனான சர்வதேச அணு திட்ட உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். மேலும், ஈரானுடன் பிற நாடுகள் வர்த்தகம், முதலீடுகள் மேற்கொள்வதற்கும் தடை விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.