கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில் பங்கு சந்தையானது நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது. காரணம் என்ன? பார்க்கலாம்.
பங்குசந்தை முதலீட்டாளர்களின் மனநிலை ஏற்கனவே சரிவின் விளிம்பில் இருந்தது. மந்தமான வருவாய், இந்திய பங்கு சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குகள் விற்பனை மற்றும் பட்ஜெட்டுக்கு முந்தைய நடுக்கம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை ஆகியவை அவர்களின் மனநிலையை தடுமாறச் செய்திருந்தது.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும் சில முக்கிய சட்டத்தில் கையெழுத்திட்டதும் இந்திய பங்கு சந்தையானது மளமளவென சரிவைக்கண்டது.
இந்திய பங்குசந்தை
டொனால்டு ட்ரம்ப் ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்ற மறுநாளே இந்திய பங்குச் சந்தையானது கடந்த 7 மாதங்களில் இல்லாதவகையில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. நேற்றைய பங்குசந்தையின் நிலவரப்படி நிஃப்டி 23024 புள்ளிகளிலும் சென்செக்ஸ் 75838 புள்ளிகளிலும் வர்த்தகமானது முடிவடைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 5920 கோடி மதிப்புள்ள இந்திய பங்குகளை விற்றனர். அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டாளார்கள் 3500 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இந்த மாதம் FII ரூ. 52,317 பங்குகளையும் DII கள் ரூ.57,189 கோடிக்கு நிகர கொள்முதல் செய்தன.
இந்திய பங்குகள் சரிவடைந்தது குறித்து கோடக் செக்யூரிட்டிஸின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீபால் ஷா கூறும் பொழுது, “டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்து புதிய கட்டண நடவடிக்கைகளை அறிவித்துள்ளதால் உலகச் சந்தைகள் எச்சரிக்கைப்போக்கை கையாளுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய பங்குச் சந்தை குறைவதற்கு முக்கிய காரணம்
பிரிக்ஸ் நாடுகள் மீதான வரி உயர்வு...
அமெரிக்காவின் 47வது அதிபராக திங்களன்று பதவியேற்ற சிறிது நேரத்திலேயே ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், ”பிரிக்ஸ் நாடுகள் மீது 100% இறக்குமதி வரி விதிக்கப்படும்” என்று கூறினார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகினார்.
பருவநிலை மாற்றத்தைத் தணிக்கும் இயக்கமான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதனால் அமெரிக்காவை உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற்றினார். மேலும் கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
H1B விசா திட்டம்
அதே போல் பிறப்புரிமை குடியுரிமைக்கு H1B விசா திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக அறிவித்தார். இதனால் அமெரிக்காவில் குடியேறத்திட்டமிட்டுள்ள மில்லியன் கணக்கான இந்தியர்களை இந்த திட்டம் பாதிக்கும்.
LGBTQ சமூகம் (மாற்று பாலினத்தினர்)
ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும் என்று அறிவித்தார். மேலும் அமெரிக்க ராணுவத்தில் பணி புரிந்துக்கொண்டிருக்கும் LGBTQ சமூகத்தினருக்கு விருப்ப ஓய்வை அறிவித்தார். இதனால் உலக மொத்த அதிர்ப்தியை எதிர்கொண்டுள்ளார்.
முழு வேலை நேரம்
அனைத்து கூட்டாட்சி ஊழியர்களும் முழுநேர அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தினார், மேலும் புதிய அரசாங்க பணியமர்த்தல்களுக்கு தடை விதித்தார்.
டிரப்பின் இத்தகைய உத்தரவு இந்திய பங்குசந்தையை தாக்கியது.
சற்று ஏற்றத்துடன் காணப்பட்ட இன்றைய இந்திய பங்குசந்தை
இருப்பினும் இன்றைய பங்கு சந்தையானது சற்று ஏற்றத்துடன் காணப்பட்டது நிஃப்டி 130புள்ளிகள் அதிகரித்து 23155 புள்ளிகளும் சென்செக்ஸ் 566 புள்ளிகள் அதிகரித்து 76404 புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடித்துக்கொண்டுள்ளது.