தெலங்கானாவில் ஆளும் டிஆர் எஸ் கட்சி, ஆட்சியை மீண்டும் தக்க வைக்கிறது. அறுதி பெரும்பான்மையுடன் அந்த கட்சி அங்கு ஆட்சி அமைக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி, ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. அதே ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் தெலுங்கானா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அவர் முதலமைச்சராக பதவியேற்றார்.
4 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்த அவர், தெலுங்கானா சட்டசபையின் ஆயுட்காலம் முடியும் முன் ஆட்சியை கலைத்தார். இதையடுத்து ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களுடன், தெலுங்கானா தேர்தலும் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் டிஆர் எஸ் கட்சியை எதிர்த்து தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. பாஜக தனியாக போட்டியிட்டது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.தொடக்கம் முதலே சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 119 இடங்களில் பெரும்பான்மைக்கு 60 இடங்கள் தேவை. ஆனால் அந்தக் கட்சி 80 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இதனால் இந்த தேர்தலிலும் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது.