இந்தியா

தாய்க்கு கொரோனா.. குழந்தைக்கு மாதிரிகள் எடுத்ததில் அலட்சியம்: மூக்கில் ரத்தம் வந்து இறப்பு

webteam

பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கொரோனா பரிசோதனைக்காக மூக்கிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் திரிபுராவில் நிகழ்ந்துள்ளது.

திரிபுரா மாநிலத்தின் அகர்டலா நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 10ஆம் தேதி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால் குழந்தைக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறதா ? என்பதை அறியும் வகையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி மாதிரிகள் எடுக்கப்பட்டன. குழந்தையின் மூக்கில் டியூப் மூலம் மாதிரிகள் எடுத்தபோது, மூக்கிலிருந்து ரத்தம் வந்திருக்கிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது பிரச்னை எதுவும் இல்லை குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே குழந்தை இறந்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், தனது குழந்தை இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என காவல்நிலையத்தில் புகாரளித்தார். இருப்பினும் குழந்தையின் தாய்க்கு கொரோனா இருந்ததால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கொரோனா இல்லை என சோதனையில் உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அப்பெண், காவல்துறையினரிடம் புகார் குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் எடுத்ததில் பிறந்த 3 நாட்களே ஆன குழந்தை இறந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.