இந்தியா

திரிபுரா வகுப்புவாத வன்முறை குறித்து செய்தி வெளியிட்டதற்காக 2 பெண் நிருபர்கள் கைது

Veeramani

திரிபுராவில் வகுப்புவாத வன்முறை குறித்த செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

திரிபுரா வகுப்புவாத வன்முறை பற்றிய செய்தியை வெளியிட்டது தொடர்பாக, குமார்காட் காவல் நிலையத்தில் HW  நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றும் சம்ரிதி சகுனியா மற்றும் ஸ்வர்ணா ஜா ஆகிய இரு பத்திரிகையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. அக்டோபரில் இருந்து மாநிலத்தில் உள்ள மசூதிகள் மீதான வன்முறை மற்றும் தாக்குதல்கள் பற்றிய புலனாய்வு செய்திகளை இந்த பத்திரிகையாளர்கள் இருவரும் எழுதி வந்தனர்.

இரண்டு பத்திரிகையாளர்களும் முதலில் திரிபுரா காவல்துறையினரால் மாநிலத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர், ஆனால் பின்னர் அசாமில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்கள் மீண்டும் திரிபுராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். சகுனியா மற்றும் ஜா ஆகியோர் திரிபுராவின் உதய்பூர் உட்பிரிவு கோமதி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அகர்தலா காவல்துறை இயக்குநர் ஜெனரல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அகர்தலாவுக்கு வருவதற்குப் பதிலாக, இரண்டு நிருபர்களும் அஸ்ஸாம் நோக்கி தப்பிச் சென்றனர். இந்த இரண்டு ஊடகவியலாளர்களும் சமூகங்களுக்கிடையில் பதட்டங்களை உருவாக்கும் வகையில் செய்தி வெளியிட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.