தனது அக்காவும், காங்கிரஸ் வேட்பாளருமானவரை தாக்க முயன்ற நபரை திரிபுரா காங்கிரஸ் தலைவர் காவல்நிலையத்திலே வைத்து அறைந்தார்.
திரிபுராவின் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் பிரத்யோத் கிஷோர் டேப் பர்மன். இவரது அக்காவான பிராக்யா டேப் பர்மன் திரிபுராவின் கோவாய் மாவட்டத்தின் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் ஈடுபட்ட பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது காரை திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னேற்றம் என்ற கட்சியை சேர்ந்த சிலர் வழிமறித்தனர். அவர்கள் கற்களைக்கொண்டு காரை தாக்கியதுடன், காருக்குள் இருந்த பிராக்யாவையும் ஒரு நபர் தாக்க முயன்றார்.
இதையடுத்து காவல்துறையினர் பிராக்யாவை தாக்க முயன்ற நபரை கைது செய்தனர். அவரை காவல்நிலையத்தில் வைத்து விசாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் தலைவர் பிரத்யோத், கோபத்தில் அந்த நபரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். மேலும், தனது அக்காவை தாக்க முயன்றதற்கு அந்த நபரை கடுமையாக கண்டித்தார். பின்னர் அங்கிருந்த காவல்துறையினர் பிரத்யோத்தை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.