இந்தியா

முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்

முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்

Rasus

மாநிலங்களவையில் இன்று முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதால் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமையை பாதுகாக்கும் வகையில் கடந்த 25-ம் தேதி மக்களவையில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் மசோதாவை நிறைவேற்றும் வகையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இறுதியில் வாக்கெடுப்பில் 302 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 78 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததால், மசோதா நிறைவேறியது.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் மசோதாவை நிறைவேற்றும் வகையில், இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவுக்கு போதிய பலம் இல்லாத காரணத்தினால், அனைத்து எம்.பி.க்களும் தவறாமல் அவைக்கு வரவேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். அதேபோல், மசோதாவை முறியடிக்கும் வகையில், காங்கிரஸ் சார்பிலும், அக்கட்சியின் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.