இந்தியா

மாநிலங்களவையில் சவாலை சந்திக்கவுள்ள முத்தலாக் மசோதா..!

Rasus

முத்தலாக் தடைச் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதா கடந்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் முத்தலாக் தடை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

அதனைத்தொடர்ந்து, இந்தச் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முத்தலாக் தடை சட்டத்திருத்த மசோதாவை, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று‌ எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நிறைவேறுமா மசோதா..?

245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகபட்சமாக 73 எம்பிக்கள் உள்ளனர். அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர். அதிமுகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தலா 13 எம்பிக்களை பெற்றுள்ளன. பிஜு ஜனதா தளத்திற்கு 9 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதாதளம், தெலுங்குதேசம், டிஆர்எஸ் ஆகிய 3 கட்சிகளும் தலா 6 இடங்களை வைத்துள்ளன. ராஷ்ட்ரிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 உறுப்பினர்களும் திமுக, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 4 உறுப்பினர்களும் உள்ளனர். சிவசேனா, ஆம் ஆத்மி, அகாலிதளம் கட்சிகளுக்கு தலா 3 உறுப்பினர்கள் உள்ளனர். சமாஜ்வாதி கட்சிக்கு 13 உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர பிற கட்சிகளுக்கு 25 உறுப்பினர்கள உள்ளனர்.

இதில் மசோதாவுக்கு பாஜக, சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம், அகாலிதள் போன்ற சில கட்சிகள் மட்டுமே ஆதரிக்கின்றன. மற்ற கட்சிகள் மசோதாவில் திருத்தங்கள் செய்தால் மட்டுமே ஆதரிக்க முடியும் எனக் கூறுகின்றன. எனவே தற்போதைய நிலையில் மசோதாவை ஆதரிப்பவர்களை விட எதிர்ப்பவர்களே அதிகம் என்பதால் அதை நிறைவேற்றுவதில் அரசு பெறும் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.