வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு (2024, ஆகஸ்ட் 9), கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சீல்டா நீதிமன்றம் சஞ்சய் ராய்தான் குற்றவாளி என கடந்த ஜனவரி 18ஆம் தேதி உறுதிப்படுத்தியது. தொடர்ந்து அவருக்கு தண்டனை குறித்த விவரங்களை, ஜனவரி 20ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், தற்போது அடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கு மேற்கு வங்க அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஜூன் 25ஆம் தேதி, கல்லூரியின் யூனியன் அறையில் 24 வயது சட்ட மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா (31), தற்போதைய மாணவர்கள் புரோமித் முகர்ஜி மற்றும் ஜைத் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கல்லூரியின் காவலரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதான மனோஜித் மிஸ்ரா திரிணாமுல் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஆகையால், ”அவர் இந்த வழக்கில் இருந்த தப்பக்கூடும்” என தகவல்கள் பரவிய நிலையில், ”ஆனால் இந்த தண்டனையிலிருந்து யாரையும் பாதுகாக்காது” என்று கட்சி வலியுறுத்தியுள்ளது. அதேநேரத்தில், இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் சூடுபிடித்துள்ளது.
கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கருத்து கூறிய செராம்பூர் எம்.பி. கல்யாண் பானர்ஜி, ”தவறான நபர்களுடன் சகவாசம் கூடாது. ஒரு நண்பரே, ஒரு நண்பரை பாலியல் வன்கொடுமை செய்தால், பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும்? பள்ளிகளில் போலீசார் இருப்பார்களா? இதை மாணவர்கள் மற்றொரு மாணவிக்கு செய்துள்ளனர். இப்படியிருந்தால், பாதிக்கப்பட்டவரை யார் பாதுகாப்பார்கள்" எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
தவறிழைத்தவர்களை கண்டிக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிவுரை கூறும் இவ்வாசகம் திரிணமூல் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ”அவரது கருத்து கட்சியின் கருத்தல்ல” என விளக்கம் வெளியானது. ஆனால், ”கல்யாண் பானர்ஜியை கண்டிக்க கட்சி தவறி விட்டது” என மகுவா மொய்த்ரா விமர்சித்துள்ளார். இதையடுத்து மகுவாவை கல்யாண் மீண்டும் விமர்சித்துள்ளார். ”65 வயது நபரை மணந்துகொண்டு ஒரு குடும்பத்தை கெடுத்தவர்தானே இவர்” என கல்யாண் கூறியுள்ளார். ”மகுவா பெண்களுக்கு எதிரானவர் என்றும் சுயநலமிக்கவர் என்றும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளவர்” என்றும் கல்யாண் பானர்ஜி கூறியுள்ளார். 3 மாதங்களுக்கு முன்பும் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டிருந்தது. கல்யாண் பானர்ஜியை உடனே கைது செய்ய அருகிலிருந்த காவலரிடம் மகுவா அப்போது கூச்சலிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், டெல்லியில் திரிணாமுல் எம்.பி.க்களுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே ஒரு பொது மோதல் வெடித்திருப்பது அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.