வங்கிகள் விவசாயிகளிடம் கடன்தொகையை திரும்பக் கேட்டு தொல்லை செய்யக் கூடாது என மாநிலங்களவையில் திமுக எம்.பி திருச்சி சிவா வலியுறுத்தினார்.
பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. நேற்று தமிழக விவசாயிகளை திமுக எம்.பி திருச்சி சிவா நேரில் சந்தித்து பேசினார். அவருடன் விவசாயிகளும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து பேசினர்.
இந்நிலையில் விவசாயிகள் பிரச்னைக குறித்து மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிகளை இணைப்பது முக்கியமானது என்றார். அது போக விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை வங்கிகள் கடன் தொகையை திரும்ப கேட்டு மேலும் வதைக்கின்றனர். விவசாயிகளை தொல்லை செய்ய கூடாது என வங்கிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும் எனவும் சிவா கேட்டுக்கொண்டார்.