யானை Twitter
இந்தியா

”அரிசிக்கொம்பன் வரவேண்டும்; இல்லாவிட்டால்..” பழங்குடி மக்கள் எடுத்த புது முடிவு!

விலங்குகளுடனான மனிதனின் தொடர்பு இன்றுவரை உள்ளது. அதை உறுதிசெய்யும் விதமாக அரிசிக்கொம்பனை திரும்ப தங்களிடம் ஒப்படைக்கும்படி கேரள பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

PT WEB

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கனால் பகுதியில் 10 பேரை பலி கொண்டதாகக் கூறப்படும், அரிசிக்கொம்பன் என்கிற காட்டு யானை, கடந்த ஏப்ரல் 30ம் தேதி சின்னக்கனாலில் பிடிக்கப்பட்டு தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக வனப் பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது.

அங்கிருந்து மேகமலை சென்று மீண்டும் தேக்கடி வந்த அரிசிக்கொம்பன், தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை அடுத்த சண்முக நதி அணைப்பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டிருந்தது.

பின்னர் கடந்த ஜூன் 5ஆம் தேதி அதிகாலை சண்முகா நதியை அடுத்த சின்ன ஓவலாபுரம் பகுதியில் உள்ள விளைநிலத்தில் நின்றிருந்த அரிசிக்கொம்பன், வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது. பின் உதயன், முத்து, சுயம்பு ஆகிய மூன்று கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்ட அரிசிக்கொம்பன், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு முத்துக்குளி வயல் நீர் தேக்கப் பகுதியில் விடப்பட்டது.

அப்பகுதியின் நீர்த்தேக்க கரையோர பகுதி ஒன்றில் துள்ளலுடன் நின்ற அரிசிக் கொம்பன் யானை குறித்த வீடியோவை தமிழக வனத்துறையின் கூடுதல் தலைமை அரசு செயலர் சுப்ரியா சாகு வெளியிட்டார். இந்த நிலையில் அரிசிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டு, திருநெல்வேலி கொண்டு செல்லப்பட்ட அதே நாள் இரவு, சின்னக்கனால் பகுதியின் ஐந்து குடிகளைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது மீண்டும் அப்பகுதி பழங்குடியின மக்கள் அரிசிக்கொம்பனை திரும்பக் கேட்டு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருன்றனர். அரிசிக் கொம்பன் ஃபேன்ஸ் என்ற ஃப்ளக்ஸ் போர்டு வைத்து போராட்டம் நடத்தி வரும் அவர்கள், "அரிசிக்கொம்பனைத் திருப்பித் தா, அரிசிக்கொம்பனை கொண்டு வா" என்ற முழக்கங்களை எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பழங்குடியின மக்கள், ”அரிசிக்கொம்பனைத் திருப்பித் தராவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, சின்னக்கனால் பழங்குடியினர் மொத்தமாக தேர்தல் புறக்கணிப்பு செய்ய உள்ளோம்” என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.