இந்தியா

‘திருநங்கையாக இருக்கிறேன்’: பெற்றோரால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுவன்..!

‘திருநங்கையாக இருக்கிறேன்’: பெற்றோரால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுவன்..!

webteam

மாணவர் ஒருவர் தன்னை திருநங்கை என கூறியதால் வீட்டார் அவரை துன்புறுத்தி, வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் தன்னை திருநங்கை என வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார். அவரது அடையாளத்தை வீட்டில் உள்ளவர்கள் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. ஆகவே மனரீதியான தாக்குதலை அவர் எதிர்கொண்டுள்ளார். மேலும், வீட்டை விட்டு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். அதனை அறிந்து உதவிக்கு வந்த கேரள குழந்தைகள் நலக் குழு அவரை மீட்டு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து காவல்துறை மூலம் அறிந்த குழந்தைகள் நலக் குழு (சி.டபிள்யூ.சி ), இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. உடனே திருநங்கை செயற்பாட்டாளர் ஒருவரிடம் அந்த மாணவனை கவனிக்கும் பொறுப்பை வழங்கியுள்ளனர். மேலும் இவர்கள் பாலினம் பற்றியும் மாணவனின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து பேசிய சி.டபிள்யூ.சி உறுப்பினர் தனூஜா, “இந்த மாத தொடக்கத்தில் கேரளாவிலுள்ள மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டில் ஏற்பட்ட மனரீதியான துன்புறுத்தலைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறினார். அவர் இந்த மாவட்டத்திலுள்ள திருநங்கைகள் தங்கும் இடத்தில் தனக்கு ஒரு இடத்தை ஏற்பத்தி தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்” என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் மாணவரை குடும்பத்துடன் அனுப்பினால், மீண்டும் வீட்டை விட்டு வெளியேறலாம். ஆகவே மாணவனுக்கும் பெற்றோருக்கும் தனித்தனியாக ஆலோசனை வழங்குகிறோம். ஆலோசனையின் முதல் அமர்வில், பல்வேறு பாலின அடையாளங்களைப் பற்றி பெற்றோருக்கு புரிய வைப்பதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். கவுன்சிலிங் நடப்பதற்கு முன்பு, அவர்கள் குழந்தையை மீண்டும் பார்க்க விரும்பவில்லை என்று கூறிக் கொண்டிருந்தனர்.

ஆனால், முதல் சுற்று ஆலோசனைக்குப் பிறகு ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சி.டபிள்யூ.சி உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் வாரத்திற்கு ஒரு முறை மாணவரை சந்திக்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். குடும்பத்தினர் இதனை புரிந்து கொள்வார்கள் என்றும், மாணவர் பெற்றோருடன் தொடர்ந்து வாழ முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம் ”என்று தனூஜா கூறியுள்ளார்.