தனது மகளுக்கு தொல்லை கொடுத்த அரியானா மாநில பா.ஜ.க. தலைவர் மகனுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
அரியானா பா.ஜ.க. தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. இவர் கடந்த மாதம் தனது நண்பருடன் சேர்ந்து வர்னிகா என்ற பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தார். விரேந்தர் குண்டு என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகளான அந்த பெண், இது குறித்து போலீசில் புகார் செய்தார். முதலில் நடவடிக்கை எடுக்க தயங்கிய போலீசார், கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு விகாஸ் பராலாவை கைது செய்தனர்.
இந்த நிலையில், மாநில சுற்றுலா துறையில் பொறுப்பு வகித்து வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி விரேந்தர் குண்டு, தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கூடுதல் தலைமை செயலாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். பா.ஜ.க. தலைமையிலான அரியானா அரசு நேற்று அதிகாரிகளை மாற்றம் செய்தது. இது வழக்கமான மற்றம்தான் என்று விரேந்தர் தெரிவித்தார். இருப்பினும் இந்த டிரான்ஸ்பருக்கான குறிப்பிட்ட காரணத்தை அரியானா அரசு தெரிவிக்கவில்லை. விரேந்திர குமார் முன்பு வகித்து வந்த பதவியை விட தற்போது மாற்றப்பட்டுள்ளது சற்றே குறைவானது என்று கூறப்படுகிறது.
பா.ஜ.க.வுக்கு எதிராக தனது மகளுக்கு நீதி கேட்டு குரல் கொடுத்ததற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி தண்டிக்கப்பட்டுள்ளார் என்று அரியாக காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவரான ரன் தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள பா.ஜ.க. தலைவர் மகன் விகாஸ் பராலாவின் ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த டிரான்ஸ்பர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.