இந்தியா

’என்டே பேபி..என்டே கைகளிலேக்கு வந்ந ஒரு திவஸமானு’ - ட்ரான்ஸ் தாய் ஸியா நெகிழ்ச்சி தருணம்!

Sinekadhara

கேரளாவில் மூன்றாம் பாலினத் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. மூன்றாம் பாலினத் தம்பதிக்கு குழந்தை பிறந்திருப்பது இதுதான் நாட்டிலேயே முதன்முறை என்பதால் பேசுபொருளாகியிருக்கிறது. 

பெண்ணாக வாழ்வதும், பெண்ணாகவே அறியப்படுவதும் திருநங்கையரின் அடிப்படை விருப்பமாக இருந்தாலும், குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அவர்களுக்கு கனவாகவே இருக்கிறது. ஸியா பவல் ( Ziya Paval ) என்ற திருநங்கைக்கு தாயாக இருப்பது பெருங்கனவாகவே இருந்தது. இவரின் இணையரான திருநம்பி ஸகத்துக்கும் தந்தையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

மூன்றாம் பாலினத் தம்பதியாக இருப்பதால் குழந்தையை தத்தெடுப்பது இவர்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்தது. இந்நிலையில், மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஸகத் கருத்தரித்தார்.

ஸகத் எட்டுமாதக் குழந்தையை கருவில் சுமந்திருப்பதாக அண்மையில் இன்ஸ்டாகிராமில் ஸியா பவல் பதிவிட்டிருந்தார். கருவுற்ற காலத்தை கொண்டாடும் விதமான பதிவுகளை இத்தம்பதியர் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் ஸகத்துக்கு அறுவை சிகிச்சைமூலம் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஸியா தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். தந்தையும், சேயும் நலமாக இருப்பதாக ஸியா குறிப்பிட்டுள்ளார். பெற்றோராகும் தங்கள் நீண்டநாள் கனவு இதன் மூலம் நனவாகியிருப்பதாக கூறியுள்ள ஸியா, தங்கள் குழந்தையின் பாலினத்தை இப்போதைக்கு வெளிப்படுத்த விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஸியா பேசிய வீடியோ ஒன்று இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ”மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய குழந்தையை என்னுடைய கைகளில் ஏந்திய நாள் இது. எனது இணையர், அதாவது குழந்தையின் அப்பாவும், குழந்தையும் ஆரோக்கியமாகவும், நன்றாகவும் உள்ளனர். இரண்டு பேரும் ஐசியுவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். குழந்தை பால் குடித்து மிகவும் நலமுடன் உள்ளது. ஒரு பிரச்னையும் இல்லை. உடலளவிலும், மனதளவிலும் எனது இணையும் நலமுடன் இருக்கிறார்” என்று நெகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார் ஜியா.

பெண்ணாக இருந்து ஆணாக மாறியவருக்கு குழந்தை பிறந்திருப்பது நாட்டிலேயே இது முதன்முறையாக பார்க்கப்படுகிறது.