இந்தியா

அனைத்து பெட்டிகளும் ஏசி: சாமானியர்கள் நெருங்க முடியாத கட்டணத்தில் டெல்லி-சென்னை ரயில்!

அனைத்து பெட்டிகளும் ஏசி: சாமானியர்கள் நெருங்க முடியாத கட்டணத்தில் டெல்லி-சென்னை ரயில்!

webteam

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஊரடங்கின் ஒரு பகுதியாக மார்ச் 25 ஆம் தேதி முதல் ரயில்வே போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் பயணிகளுக்கான சிறப்பு ரயில்கள் இயங்கும் என ரயில்வே துறை அறிவித்தது.

அதன் படி இந்தச் சிறப்பு ரயில்கள் புது டெல்லியிலிருந்து திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புபனேஷ்வர், செகுந்தராபாத், பெங்களூர், சென்னை, திருவனந்தபுரம், மடகான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ரயில் நிலையங்களிடையே இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்திருந்தது.

இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ரயில் கட்டணம் சாமானியர்கள் செல்ல முடியாத அளவுக்கு இருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். டெல்லி - சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கு குறைந்தபட்ச கட்டணம் 2430 ரூபாய், அதிகபட்ச கட்டணம் 5995 ரூபாய் ( வகுப்புகளின் அடிப்படையில் ) உள்ளது. அதாவது,

குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு - 5995 ரூபாய்

குளிர்சாதன வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு -3500 ரூபாய்

குளிர்சாதன வசதி கொண்ட மூன்றாம் வகுப்பு - 2430 ரூபாய்

இந்த சிறப்பு ரயில்கள் அனைத்திலும், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மட்டுமே இடம் பெறும் என்றும் ராஜதனி அதிவிரைவு ரயிலில் உள்ள கட்டணம் அமல்படுத்தப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை - டெல்லி இடையே சாதாரண படுக்கை வசதி கொண்ட ரயில் கட்டணம் 820 ரூபாய் ஆகும். இந்த நிலையில் அவ்வகை பெட்டிகள் இதில் இல்லாமல், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.