செய்தியாளர் - கார்த்திகேயன்
ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் புகார்களை மிகவும் அலட்சியமான முறையில் கையாள்வதாக, அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய புகார் மையங்களை நடத்த வேண்டும் என்றும், இந்த புகார் மையங்களில், குறைந்தபட்சம் 16 மணி நேரமாவது மனிதர்கள் சேவையில் இருக்க வேண்டும் என்றும் டிராய் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மொபைல் செயலி, இணையதளம், மின்னஞ்சல், வாடிக்கையாளர் சேவை எண்கள் போன்ற முறைகளில் புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறிய டிராய், புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக உதவி மையங்கள் அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதுமட்டுமின்றி, வாடிக்கையாளரின் முதல் புகாருக்கு தீர்வு காண, முதலில் 30 நாட்கள் வரை கால அவகாசம் இருந்தது. ஆனால், தற்போது அது 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 15 நாட்களுக்குள், புகார் மீது என்ன நடவடிக்கையை எடுத்தோம் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த விதிகளை முறையாக பின்பற்றாமல் இருந்தால், முதல் புகாருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், இதே தவறு மேல்முறையீட்டில் மீண்டும் நடந்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, ஒரு காலாண்டிற்கு 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று டிராய் அதிரடி விதியை உருவாக்கியுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, தீர்த்து வைக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை, சராசரியாக எவ்வளவு நாட்களுக்குள் புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டது, அதற்கு வாடிக்கையாளர்கள் வழங்கிய மதிப்பீடுகள் குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.