இந்தியா

குறைந்து வரும் போக்குவரத்து விதிமீறல்கள் - உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து காவல்துறை 

webteam

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பதிவான வழக்குகள், 2014ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து குறைந்து வந்துள்ளன.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், அதிவேகமாக ஆட்டோக்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக 2014ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன்மூலம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், 2018ஆம் ஆண்டில் 46 ஆயிரத்து 365 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக‌ 60 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2014ஆம் ஆண்டில் ஆட்டோக்களை அதிவேகமாக ஓட்டியதாக 3 ஆயிரத்து 393 வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், 2018ஆம் ஆண்டில் அது ஆயி‌ரத்து 65 வழக்குகளாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ஆட்டோக்களில் கூடுதலாக பயணிகளை ஏற்றியதற்காக 2014ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 494 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் 968ஆகக் குறைந்திருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், ஆட்டோ ஓட்டுநர்கள் பணியில் இருக்கும்போது சீருடை அணியாமல் இருந்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அதிகமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, சீருடை அணியாததற்காக 2014ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 843 ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ‌அது 2018ஆம் ஆண்டில் 11 ஆயிரத்து 140 வழக்குகளாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.