கோப்புபடம்  AI
இந்தியா

நாளை யுபிஐ சேவை நிறுத்தம்.. வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு!!

ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் நடைமுறையை எதிர்த்து காந்தி ஜெயந்தியான நாளை கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை பரிவர்த்தனை நிறுத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.

Premkumar S

நொடிப்பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடப்பதால் சாமானியார்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினர் இடையே யுபிஐ பரிவர்த்தனை முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், முதலில் யுபிஐ பரிமாற்றத்திற்கு மாறுங்கள் என வலியுறுத்தி வந்த மத்திய அரசு, தற்போது இதற்கும் கட்டணம் விதிக்கும் நடைமுறையை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, அக்டோபர் 15 முதல் ரூ.2000க்கு மேல் உள்ள வணிகர்களின் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணத்தை வசூலிக்கவிருக்கிறது. அதேசமயம், தனிநபர்களின் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் தெளிவுப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

நிர்மலா சீதாராமன்

இந்தச்சூழலில் தான், மத்திய அரசின் நடவடிக்கைக்கு வணிகர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வணிகர்களுக்கு கட்டணம் விதித்தாலும் மறைமுகமாக வாடிக்கையாளர்களையும் பாதிக்கும் எனவும் வலியுறுத்துகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காந்தி ஜெயந்தியான நாளை கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை நிறுத்தப்படுவதாகவும் பணப்பரிவர்த்தனை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வணிகர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் வணிகர் விரோதப் போக்கை கண்டித்து, அக்.7-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அகில இந்திய வியாபாரிகள் சங்க கோரிக்கையைத் தொடர்ந்து, அந்த போராட்டத்துக்கு முன்னோட்டமாகவும், வணிகர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பை மத்திய அரசுக்கு அறவழியில் உணர்த்தும் வகையிலும் இப்பேரவை முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அந்நியப் பொருட்களையும், அநீதியான வரிகளையும் எதிர்த்து அறவழியில் போராடிய தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்.2-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் அனைவரும், தங்கள் கடைகளில் உள்ள அனைத்து வகையான யுபிஐ, கியூஆர் கோடு பணப் பரிவர்த்தனைகளையும் ஒருநாள் முழுவதும் நிறுத்தி, ரொக்கப் பண பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ளவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.