வைரலாகும் வீடியோ Pt web
இந்தியா

வாரணாசி | ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளிடம் அநாகரீக நடத்தை., வைரலாகும் வீடியோ.!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் ஒரு கும்பல் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் வாரணாசிக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் சாண்டா கிளாஸ் தொப்பி மற்றும் நீச்சல் உடைகளை அணிந்தபடி கங்கை நதிக்கரையில் இருந்தனர். அப்போது அங்கு திரண்ட ஒரு கும்பல், அவர்களை நோக்கி கூச்சலிட்டு கேலி செய்ததுடன், அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு மிரட்டியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ

உத்தரபிரதேசம் மாநிலம் தசாஸ்வமேத் காட் பகுதியில் இருந்த ஜப்பானிய பயணிகள் கங்கை நதியில் சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தியதாக எழுந்த வதந்தியையடுத்து பயணிகளிடம் அங்கிருந்த பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டுள்ளது, அந்த காணொளியின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் நதியை அசுத்தப்படுத்தினர் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் யாரிடமும் இல்லை. இருப்பினும், இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டினால் மக்கள் கொதிப்படைந்ததையடுத்து, பயந்துபோன ஜப்பானிய பயணிகள் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர்.

இந்தியாவின் கலாச்சார மையமாகத் திகழும் வாரணாசியில், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இது போன்ற சூழல் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் உடை மற்றும் நடத்தையை முன்வைத்து இத்தகைய மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.