கேரளாவில் பகுதி நேரமாக மீன் விற்று வாழ்க்கையை நடத்தி வரும் கல்லூரி மாணவி ஹனனை கேலி செய்வோரை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கண்டித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஹனன் கல்லூரியில் படித்து கொண்டே பகுதி நேரமாக மீன் விற்பனை செய்து தன் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவரது வாழ்க்கை குறித்து கேரளாவின் பிரபல நாளிதழான ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரை பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதனால் ஹனன் குறித்து நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். பலர் ஹனனின் வாழ்க்கை குறித்து கேலி பதிவுகள் இட்டு வந்தனர். சில நெட்டிசன்கள் அவரது கதை பொய் என்று வதந்தியை பரப்பினர்.
இந்நிலையில் ஹனன் படிக்கும் கல்லூரியின் முதல்வரும், அவரது நண்பர்களும் ஹனன் கதை உண்மையானது என்று தெரிவித்தனர். இதையடுத்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், தனது முகநூல் பக்கத்தில், இச்சம்பவம் குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார். சில நெட்டிசன்கள் கிண்டல் செய்வதை மத்திய அமைச்சர் வன்மையாக கண்டித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஹனன், ‘எனக்கு உங்களின் எந்த உதவியும் வேண்டாம். என்னால் இயன்ற வேலையை செய்து என்னைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் ஹனனை கேரள கமிஷனர் நேரில் சென்று பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.