ராயல் பாம்ஸ் ஹோட்டல் மும்பை
ராயல் பாம்ஸ் ஹோட்டல் மும்பை web
இந்தியா

ஜம்முவிலிருந்து மும்பைக்கு சுற்றுலா சென்ற மாணவர்கள்... காத்திருந்த பேரதிர்ச்சி!

Jayashree A

இந்தியாவின் ஜம்முவில் உள்ள கத்ரா என்ற பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் சுமார் 800 பேர் தங்கள் பேராசிரியர்களின் துணையுடன் இந்தியாவை சுற்றி பார்பதற்காக IRCTC உதவியுடன், நவம்பர் 19ம் தேதி ஞானோதயா எக்ஸ்பிரஸில் புறப்பட்டுள்ளனர். அதில் அனைவரும் மும்பை வந்துள்ளனர். மும்பையில் மாணவர்கள் தங்குவதற்காக ஏற்கெனவே இரு ஹோட்டல்களில் முன்பதிவு செய்திருந்ததால், அதன்படியே தங்கியுள்ளனர். இதில் ராயல் பாம்ஸ் ஹோட்டலில் சுமார் 500 மாணவர்களும், சாகி நாகாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மீதமூள்ள மாணவர்களும் தங்கியிருந்தனர்.

இதில் ராயல் பாம்ஸ் என்ற ஹோட்டல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதாவது மாணவர்கள் தங்கும் அறைகள் அழுக்காகவும் துர்நாற்றம் வீசும்படியும் இருந்ததாகவும், படுக்கை விரிப்புகளில் கறைகள் மற்றும் பல அசௌரியங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மாணவர்கள் 800 பேருக்கும் இரவு உணவும் ராயல் பாம்ஸ் ஹோட்டலில் புக் செய்யப்பட்டிருந்துள்ளது. அதிலும் பிரச்னை இருந்துள்ளது. 800 பேருக்கு உணவு புக் செய்தபோதும், 100 மாணவர்களுக்குதான் உணவு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த மாணவர்கள், ஹோட்டலைப்பற்றிய ரேட்டிங்கை தேடியுள்ளனர். அப்போது ராயல் பாம்ஸ் ஹோட்டலில் சமீபத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக ரெய்டு நடந்த செய்தி தெரிந்துள்ளது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவற்றையெல்லாம் மாணவர்களோடு இருந்த பேராசிரியர் ராஜேஷ் சிங் என்பவர் ஊடகங்களுக்கு உறுதிசெய்துள்ளார்.

சரி வந்தாகிவிட்டது காலையில் கிளம்பிவிடலாம், அதுவரை யாரும் அறையில் தங்கவேண்டாம் (அறை சுத்தமாக இல்லாததால்) வராண்டா நடைபாதையில் தங்கிக்கொள்ளலாம் என நினைத்திருந்த சமயம், அதற்கும் ஹோட்டல் நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்காக ஹோட்டல் நிர்வாகத்துடன் மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று பவர் கட் ஆகி இருக்கிறது. தங்குவதற்குதான் சரியான இடமில்லை, உணவாவது கிடைக்கும் என்றால் அதுவும் இல்லை, இச்சமயத்தில் மின்சாரமும் இல்லாமல் இருட்டில் அவதிப்பட வேண்டியுள்ளதே என்று நினைக்கும் சமயத்தில்தான் சில மாணவர்கள் ஒன்றை கண்டுபிடித்தனர்.

அதாவது அந்த ஹோட்டலில் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்கள், அங்கிருந்து தப்பிக்க இருட்டை பயன்படுத்தி வெளியேறுவராம். அவர்களுக்கு உதவுவதற்காக ஹோட்டல் நிர்வாகம் பவர் கட் செய்திருக்கிறதாம். இதை அறிந்துக்கொண்ட மாணவர்கள், அங்கிருக்கும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் சில மாணவர்கள் ஊழியர் ஒருவரின் செல்போனை பார்க்கையில், அதில் பெண்களின் ஆபாச புகைப்படங்களும் வீடியோக்களும் இருந்துள்ளன.

இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் அன்றைய பொழுதை பயத்துடனே கழித்து தூங்கியதாக தெரிவித்துள்ளனர். ஹோட்டலில் நடக்கும் இத்தகைய செயலை ஹோட்டலின் உரிமையாளரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதற்காக ராயல் பாம்ஸின் உரிமையாளரின் ஒருவரான திலாவர் நென்சி என்பவருக்கு அழைப்புகளையும் செய்திகளையும் அனுப்பி உள்ளனர். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை எனவும் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போதுமே வெளியூர்களுக்கு, குறிப்பாக வெளி மாநிலங்களுக்கு பயனப்படுவோர் அங்கு தங்கும் இடத்தை தேர்ந்தெடுக்கும்முன் அதுகுறித்து விசாரியுங்கள். இணையத்திலும் ரிவ்யூக்கள் பலவற்றை பாருங்கள். குறிப்பாக மாணவர்கள் இவற்றை கூடுதல் அக்கறையோடு அலசுங்கள். குறிப்பிட்ட அந்த மாநிலத்தில் / ஊரில் உங்களுக்குத் தெரிந்த யாரேனும் இருந்தால், நேரடி விசாரணை பெறுவது இன்னும் நல்லது.