பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி போரைத் தொடங்கியது. இதையடுத்து, இந்தியா அதற்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதுடன், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வழிமறித்து தகர்த்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு மத்தியிலும் போர் பதற்றம் நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது. இந்தப் போர்ச் சூழலுக்கு மத்தியில் பல்வேறு போலிச் செய்திகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவின் விமானப்படை தளங்களை பாகிஸ்தான் அழித்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்பு, மின் அமைப்புகள் மற்றும் சைபர் அமைப்புகளின் பெரும் பகுதிகள் பாகிஸ்தானால் தாக்கப்படுவதாக அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுகின்றன.
பாகிஸ்தானின் இராணுவ ஊடகப் பிரிவு மற்றும் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) உடன் தொடர்புடைய உயர்மட்ட கணக்குகளால் பகிரப்பட்ட வேறு சில போலி கூற்றுகளில், பாகிஸ்தான் விமானப்படை ஸ்ரீநகர் விமானத் தளத்தை குறிவைத்து இந்திய இராணுவப் படைப்பிரிவின் தலைமையகத்தை அழித்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், இந்தக் கணக்குகள் அந்தக் கூற்றுகளை ஆதரிக்க நம்பகமான ஆதாரங்கள், புகைப்படங்கள் அல்லது செயற்கைக்கோள் படங்களை வழங்கத் தவறிவிட்டன.
இதுகுறித்து விங் கமாண்டர் வியோமிகா சிங், “இந்திய S-400 அமைப்பை அழித்ததாகவும், சூரத் மற்றும் சிர்சாவில் உள்ள விமான நிலையங்களை அழித்ததாகவும் கூறி, பாகிஸ்தான் தொடர்ந்து தீங்கிழைக்கும் தவறான தகவல்களை பரப்ப முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானால் பரப்பப்படும் இந்த தவறான கூற்றுகளை இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான தவறானத் தகவல்களை பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு கண்டறிந்து, பாகிஸ்தானுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.