மகா கும்பமேளாவில் பெண்கள் நீராடுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஒரு கும்பல் விற்று வருதவாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் விழா முடிய சில நாட்களே இருக்கும் நிலையில், பக்தர்கள் எண்ணிக்கை தற்போது 56 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது. இன்னும் 7 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில், மகா கும்பமேளாவில் பெண்கள் நீராடுவதையும் உடைமாற்றுவதையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து அதனை ஆன்லைனில் விற்றுவருவதாக அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 17ம் தேதி பெண் யாத்ரீகர்கள் அளித்த புகார் படி, இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 19ம் தேதி டெலிகிராம் சேனலில் பெண்கள் நீராடும் வீடியோக்களை விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து இந்தியா டுடே செய்தி நிறுவனம் பேக்ட் செக் வாயிலாக கண்டறிந்து வெளியிட்டுள்ளது. பேஸ்புக், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இதுகுறித்த வீடியோக்கள் ஏராளாமாக பகிரப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்தான சேனல்களை அணுகுவதற்கான கட்டணம் ரூ 1,999 முதல் ரூ 3000 வரையிலும் விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளநிலையில், மகா கும்பமேளாவில் பெண்களில் கௌரவத்தைப்பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது என்று பலர் கடும் கண்டனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், வீடியோக்கள் வெளியிட்டதாக கூறப்படும் இன்ஸ்ட்கிராம் கணக்கு மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தெரிவிக்கையில், “ மகா கும்பமேளாவில் பெண்கள் குளிப்பதைப் போன்ற ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரண்டு சமூக ஊடக கணக்குகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன. விசாரணை நடந்து வருகிறது. இதனை பதிவேற்றிய நபரின் கணக்கை மெட்டாவிடம் இருந்து கேட்டுள்ளோம். விவரங்கள் கிடைத்ததும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளனர்.