இந்தியா

தொடரும் இந்தியா- மலேசியா விரிசல்.. என்ன காரணம்..? யாருக்கு பாதிப்பு..?

jagadeesh

இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான நட்புறவில் அண்மைக் காலமாகவே விரிசல் பெரிதாகி வருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளால் தேடப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு 2016-ஆம் ஆண்டில் மலேசியா புகலிடம் அளித்தது முதல் இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் விரிவடைந்து வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தபோது, தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தபோது, அதற்கு எதிரான விமர்சனங்களை மலேசிய பிரதமர் மகாதிர் முகமது முன்வைத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்தியா, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மலேசியாவை கேட்டுக் கொண்டது. எனினும், அதற்கு மலேசிய பிரதமர் மகாதிர் முகமது செவிசாய்க்கவில்லை. இந்தச் சூழலில்தான் மலேசியாவுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்தியா நூதனமான பதிலடியை கையில் எடுத்தது. அந்நாட்டுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக திகழும் பாமாயிலை இறக்குமதி செய்வதில் கெடுபிடி காட்டத் தொடங்கியது இந்தியா. கடந்த ஆண்டு செப்டம்பரில் பாமாயில் இறக்குமதி வரியை 45 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக அதிகரித்தது.

இந்திய சமையல் எண்ணெய் வர்த்தக அமைப்பும் மலேசியாவில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்ய வேண்டாம் என இறக்குமதியாளர்களை கேட்டுக் கொண்டது. தவிர கடந்த 8-ஆம் தேதி மலேசிய பாமாயில் இறக்குமதிக்கு அதிரடியான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதன் விளைவாக கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி ஆவது 18.82 சதவிகிதம் வரை குறைந்திருக்கிறது. அடுத்து வரும் மாதங்களுக்கும் இதே நிலை நீடித்தால், மலேசியாவின் பாமாயில் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதனால் கவலையில் ஆழ்ந்துள்ள மலேசிய பிரதமர் மகாதிர், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எந்த பதிலடியும் தரப் போவதில்லை என சரணடைந்துள்ளார். மலேசியாவின் மேற்கு கடலோர தீவான லங்காவியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மலேசியா சிறிய நாடு என்றும், இந்தியாவுக்கு பதிலடி அளிக்க முடியாது என்றும் தெரிவித்தார். எனினும், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளியே வருவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார் மகாதிர்.