ராகுல், மோடி, அரவிந்த் எக்ஸ் தளம்
இந்தியா

டெல்லி | நாளை வாக்கு எண்ணிக்கை.. ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?

தலைநகர் டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (பிப்.8) எண்ணப்படுகின்றன.

Prakash J

தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் 60.42 சதவிகித வாக்குகள் பதிவாகின. தேர்தல் களத்தில் 603 ஆண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தலில் மும்முனை போட்டியாக இருந்தாலும் ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடையே கடுமையான போட்டியில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜகவே வெற்றிபெறும் எனத் தெரிவித்துள்ளன

மோடி, ராகுல், கெஜ்ரிவால்

இந்த நிலையில், இதன் வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்.8) நடைபெற இருக்கிறது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தலா 70 ஸ்ட்ராங் ரூம் வீதம் 19 இடங்களில் பல அடுக்கு பாதுகாப்புடன் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைகள் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுமார் 5,000 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அதன்படி, நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில் பிற்பகலுக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நான்காவது முறையும் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுமா அல்லது 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடிக்குமா என நாளை தெரிந்துவிடும்.

அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால்

முன்னதாக, தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் மேற்கு டெல்லி முன்னாள் எம்பி பர்வேஷ் சாஹிப் சிங்கும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்பி சந்தீப் தீட்சித்தும் களமிறக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கல்காஜி தொகுதியில், தற்போதைய ஆம் ஆத்மி முதல்வர் அதிஷிக்கு எதிராக தெற்கு டெல்லி பாஜக முன்னாள் எம்பி ரமேஷ் பிதுரியும் காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா ஆகியோரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.