இந்தியா

“ஒன்றுபடுவோம்! வெல்வோம்!” - மிஷன் ஆக்ஸிஜனுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்த ஷிகர் தவான்

EllusamyKarthik

இந்தியா கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் மிஷன் ஆக்ஸிஜனுக்கு 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் தொடரில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரராகவும் உள்ளார். 

“இதற்கு முன் நாம் எதிர்கொள்ளாத துயரமான தருணத்தில் நாம் இப்போது உள்ளோம். இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்வது தான் காலத்தின் தேவையாக உள்ளது. 

இத்தனை நாட்களாக உங்களது அன்பையும், ஆதரவையும் எனக்கு கொடுத்தீர்கள். இப்போது அதனை நான் நாட்டு மக்களுக்காக கொடுக்க கடமை பட்டுள்ளேன். அதனால் இந்தியாவின் ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 20 லட்ச ரூபாய் மற்றும் இனி நடைபெற உள்ள போட்டிகளில் எனது தனித்திறனால் ஐபிஎல் 2021 சீசனில் எனக்கு கிடைக்கும் பரிசு தொகையையும் மிஷன் ஆக்ஸிஜனுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளேன். 

முன்கள பணியாளர்களுக்கு எனது நன்றிகள். உங்களது அயராத பணிக்கு நாங்கள் கடன் பட்டுள்ளோம். அதே நேரத்தில் அனைவருக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மாஸ்க் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.

ஒன்றுபடுவோம்! வெல்வோம்!” என அவர் தெரித்துள்ளார். 

10% ஐபிஎல் சம்பளத்தை நிவாரணமாக வழங்கிய உனத்கட்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனக்கு வழங்கப்படும் சம்பளப் பணத்தில் 10 சதவீதத்தை கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக வழங்குவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் உனத்கட் தெரிவித்துள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள உனத்கட், கடந்த இரு வாரங்களாகவே இந்தியா சந்தித்து வரும் நெருக்கடியான சூழலால் மனவேதனை அடைந்துள்ளதாகவும், மருத்துவத் தேவைக்காக தவிக்கும் மக்களுக்கு உதவும் விதமாக இந்த முடிவை எடுத்ததாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பிடியில் இந்தியாவுக்கு கிரிக்கெட் வீரர்கள் உதவும் வழக்கத்தை ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் முதன்முதலாக நன்கொடை அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.