இந்தியா

கண்ணீர் விடும் காட்சிகள்: உணர்வுப்பெருக்கில் மூழ்கி நிசப்தமான நாடாளுமன்றம்

கண்ணீர் விடும் காட்சிகள்: உணர்வுப்பெருக்கில் மூழ்கி நிசப்தமான நாடாளுமன்றம்

webteam

நாடாளுமன்றத்தில் இதுவரை காணாத காட்சிகள் அரங்கேறிய நாளான இன்றைய தினத்தைச் சொல்லலாம். எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத உணர்வுக் கொந்தளிப்பை மாநிலங்களவையில் இன்று காணமுடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத்தும் மாநிலங்களவையில் கண்கலங்கிய அந்த நிகழ்வை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

எதிர்ப்புக்குரல்கள், கண்டனம், ஆவேசம் என்று ஆளும்கட்சியும், எதிர்க்கட்சிகளும் எதிர் எதிராக நிற்பதை இதே மன்றத்தில் எத்தனையோ முறை கண்டிருக்கிறோம். ஆனால், இந்தமுறை மாநிலங்களவை கண்ட காட்சி வேறுவிதமாக இருந்தது. கொள்கையிலும், இருப்பிலும் எதிர் எதிராக நிற்கின்றன இருதலைவர்களிடையேயான உணர்வுகள்தான் இதற்கு காரணமாக இருந்தது.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/BfLG6_KmlkE" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் வரும் 15 ஆம் தேதி நிறைவடைகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து 3 முறை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் குலாம் நபி ஆசாத். அவருக்கான பிரிவு உபசார நிகழ்வில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி கண்கள் கலங்கி, நா தழுதழுக்க நெகிழ்ந்துபோய் உரையாற்றினார். குலாம்நபி ஆசாத் எப்போது கர்வம் கொண்டிருந்ததில்லை என்றும், கட்சி மீதும் நாட்டின் மீதும் அதிக அக்கறை கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டிய பிரதமர், குலாம் நபி ஆசாத்தின் இடத்தை நிரப்புவது கடினம் என்றார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2007-ம் ஆண்டு நிகழ்ந்த வன்முறை தாக்குதலில் குஜராத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் உயிரிழந்த நாளில் தன்னை அழைத்து பேசிய குலாம் நபி ஆசாத், தொலைபேசியிலேயே அழுததை குறிப்பிட்ட பிரதமர், குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் இருந்து விடைபெற்றாலும், அவரிடம் ஆலோசனை கேட்பதை நிறுத்தமாட்டேன் என்றார்.

இதையடுத்து பேசிய குலாம் நபி ஆசாத், பிரிவினையின் போது பாகிஸ்தான் செல்லாததை குறிப்பிட்டு, இந்திய முஸ்லிமாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன் என்றார். 2007 ஜம்முகாஷ்மீரில் நடந்த சம்பவம் குறித்து மோடி பேசியதை சுட்டிக்காட்டிய குலாம் நபி ஆசாத், நாட்டிலிருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என கண்கலங்கினார்.

குலாம்நபி ஆசாத்துடன் மேலும் 3 எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் 15 ஆம்தேதியுடன் முடியும் நிலையில், பாரதிய ஜனதா, காங்கிரஸ் என இருவேறு துருவங்களில் நிற்கும் கட்சிகளின் மூத்தத் தலைவர்களின் பேச்சால், மாநிலங்களவை சிறிது நேரம் உணர்வுப்பெருக்கில் மூழ்கி நிசப்தமானது