இந்தியா

ம.பி. முதல்வராக கமல்நாத் இன்று பதவியேற்பு

ம.பி. முதல்வராக கமல்நாத் இன்று பதவியேற்பு

webteam

மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக கமல்நாத் இன்று பதவியேற்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி  114  இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா 109  இடங்களிலும், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் சமாஜ் வாதி 1 இடத்தில் வெற்றி கண்டன. ஆட்சியமைக்க 116 தொகுதிகள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் 2 இடங்களில் வெற்றி கண்ட பகுஜன் சமாஜ், 1 இடத்தில் வெற்றி பெற்ற சமாஜ் வாதி ஆகியவை காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தது. இதனால் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தால், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியானது. எனினும் மத்திய பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது.

முதலமைச்சருக்கான போட்டியில் மூத்த தலைவர் கமல்நாத் மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான இளம் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநில முதல்வரை தேர்ந்தெடுக்க போபாலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குப் பின் கமல்நாத்தை முதல்வராக தேர்ந்தெடுப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்நாத் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். மேலும் மத்திய பிரதேசத்திலிருந்து 9 முறை மக்களவைக்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்நாத் மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார். போபாலில் நடைபெறும் விழாவில் அனைத்து மத பிரார்த்தனையை தொடர்ந்து பதவியேற்பு நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர்பங்கேற்கின்றனர். மக்களவை எம்பி ஆக உள்ள கமல்நாத் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோரும் இன்று பதவியேற்கவுள்ளனர். அந்த விழாவிலும் ராகுல் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்‌ட்டுள்ள பூபேஷ் பாகெல் இன்று மாலை பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.