இந்தியா முழுவதும் 17 கோடி குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இளம்பிள்ளைவாதம் எனப்படும் கால் முடக்கவாத நோயான போலியோவை ஒழிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் 5 வயது குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான முகாமை குடியரசுத் தலைவர் ராாம்நாத் கோவிந்த் நேற்று தொடக்கிவைத்தார்.
இந்தியா முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக 24 லட்சம் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தமிழகத்தைப் பொருத்தவரையில் 43,051 மையங்களில் 70 லட்சம் குழந்தைகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
கொரோனா அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கக்கூடாது என்றும், கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகள் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாம் காரணமாக இன்று மட்டும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.