புதுச்சேரியில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க களத்தில் இறங்கி பணியாற்றி வரும் அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று பரிசோதனை செய்யப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.5 லட்சம் கொடுத்து இருப்பதாகவும் இதே போல் மற்ற நடிகர்களும் கொடுத்து உதவ வேண்டும் எனவும் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.