ஒடிசா ரயில் விபத்து, அஸ்வினி வைஷ்ணவ்
ஒடிசா ரயில் விபத்து, அஸ்வினி வைஷ்ணவ் ANI
இந்தியா

ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் விபத்து.... முழு விவரம்!

Jayashree A

ஒடிசாவில் இன்று மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டுள்ளது. ஒடிசாவின் பர்கார் பகுதியில் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை - இந்த விபத்துக்கும் ரயில்வே துறைக்கும் தொடர்பில்லை எனத்தகவல் வெளிவந்துள்ள நிலையில், அடுத்ததுத்து தொடர் ரயில் விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்திரவிடவேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஏற்கெனவே, மே 2-ம் தேதி இரவு ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி ஏற்பட்ட பெரும் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். அதற்கிடையே இன்று நடந்த இந்த விபத்து, அதன் தாக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நேரத்தில், இதற்கு முன் இந்தியாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகியவர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம்.

1956ல் நவம்பர் மாதம் ஏற்பட்ட அரியலூர் ரயில் விபத்தில் 142 பேர் பலியானதுக்கு தார்மீகப்பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார்.

அடுத்து, 1999 ஆண்டு ஆகஸ்ட் மாதம் அசாம் கெய்சால் ரயில் விபத்தில் 290 பேர் பலியான நிலையில் அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் நிதிஷ் குமார் பதவி விலகினார்.

அடுத்து, 2000 ஆண்டு அடுத்தடுத்து ஏற்பட்ட 2 ரயில் விபத்துக்களில் தார்மீக பொறுப்பேற்று மம்தா பானர்ஜி பதவி விலகினார்.

மம்தா பானர்ஜி

சமீபத்தில் 2017ம் ஆண்டில் கலிங்கா, பூரி உத்கல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பதவி விலகினார்.

இதையெல்லாம் குறிப்பிட்டு, “இதே போல் ஒடிசா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று அஸ்வினி வைஷ்னவ் பதவி விலகுவாரா?” என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இச்சூழலில், அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் யார், இவர் கடந்துவந்த பாதையை என்ன என்பதையும் இங்கு பார்க்கலாம்.

அஸ்வினி வைஷ்ணவ் அடிப்படையில் அரசியல்வாதி அல்ல.... அவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், குடிமைப்பணித்தேர்வில் வென்று, இந்திய ஆட்சி பணி அதிகாரியானார். அவரின் முதல் பணி இடமே ஒரிசா மாநிலம் தான். கட்டாக் மற்றும் பலாசூர் மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியிருக்கிறார்.

Ashwini Vaishnaw

பின்னர் வாஜ்பாய் பிரதமராக் இருந்த போது அவரது அலுவலகத்தில் பணிபுரிந்தார். மன்மோகன் சிங் ஆட்சியில் வாஜ்பாய்க்கு செயலாளராக இருந்தார். பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரி பொறுப்பிலிருந்து விலகி பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார். அவரின் நிர்வாகத்திறனை கருத்தில்கொண்டே மோடி அரசில் இவருக்கு இரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதன்படி தற்போது ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு அஸ்வினி வைஷ்ணவ் அமைச்சராக உள்ளார்.