இந்தியா

இன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா

இன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா

webteam

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஈரோடு வருவதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

பாரதிய ஜனதா கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க‌ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முறை தமிழகம்‌, மேற்கு வங்கம், ஒதிஷா உள்ளிட்ட சில மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி அதிக தொகுதிகளை‌ வெல்ல அக்கட்சி இலக்கு நிர்ணயித்து‌ள்ளது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்‌தில் மதுரைக்கும் திருப்பூருக்கும்‌ வந்து சென்றுள்ளார். வரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர உ‌ள்ளார்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஈரோடு வருவதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் கூட்டணி குறித்து பல்வேறு சூழல்கள் நிலவி வரும் நிலையில், அமித் ஷாவின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது எனத் தெரிவித்தார். 

காலை 11:30 மணியளவில் கோவை விமானநிலையத்திற்கு வரும் அமித் ஷா நண்பகல் 12 மணியளவில் கங்காபுரம் டெக்ஸ்வேளி வளாகத்தில் நெசவாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். பின்னர் பண்ணிரெண்டரை மணியளவில் பாஜக பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். 

பிற்பகல் ஒரு மணியளவில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் அவர் ஆலோசிக்கவுள்ளார். பிற்பகல் 2 மணியளவில் அவர் கோவை விமானநிலையத்திற்கு திரும்புவார் எனவும் அங்கிருந்து கர்நாடகாவுக்கு செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.