மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம் புதிய தலைமுறை
இந்தியா

இன்று மீண்டும் வெடித்த மோதல்: பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றத்தில் மணிப்பூர்!

Prakash J

கடந்த ஏப்ரல் மாதம் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும், பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், வீடுகளில் இருந்த 9 பேர் உயிரிழந்ததாகவும் 10 காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும், காயமடைந்த பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. தவிர, இம்பால் மேற்கு மாவட்டத்தின் லாம்பெல் பகுதியில் உள்ள குக்கி இனத்தைச் சேர்ந்த தொழில்துறை அமைச்சர் நேம்சா கிப்ஜெனின் வீட்டிற்கு சில மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர். அப்போது அவர் வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. விடுமுறையில் சென்ற போலீசாருக்கு மீண்டும் பணியில் சேர அவசர அழைப்பும் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று மாலை மீண்டும் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டோர் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இம்பால் பள்ளத்தாக்கில் பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

“பாஜக வெறுப்பு அரசியலே காரணம்” - ராகுல் காந்தி 

மணிப்பூரில் தொடர்ந்து நடைபெறும் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பாஜக வெறுப்பு அரசியலே காரணம்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவின் வெறுப்பு அரசியலால் மணிப்பூரில் 40 நாட்களாக நடக்கும் வன்முறையில் 100 பேர் இறந்துள்ளனர்.

பிரதமர் இந்தியாவை தோல்வியுறச் செய்துவிட்டு முற்றிலும் அமைதியாக இருக்கிறார். மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளும் குழுவை அம்மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

மன உளைச்சலை ஏற்படுத்துகிறது - பிரியங்கா காந்தி

இதுகுறித்து ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டர் பதிவில், ”மணிப்பூரின் நிலைமை மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு மணிப்பூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

தொடரும் வன்முறையின் பின்னணி;

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். இதில் மலைப் பகுதிகளில் வசிக்கும், ’குக்கி’ என்ற பழங்குடியினத்தவருக்கும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் ’மெய்டீஸ்’ என்ற பழங்குடியினர் அல்லாதவர்களுக்கும் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் எனக் கோரிவரும் மெய்டீஸ் சமூகத்தினருக்கு எதிராக குக்கி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக எழுந்த மோதல் காரணமாக, கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி மணிப்பூரின் 8 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் மணிப்பூர் மாநிலமே தீயில் கருகியது. பல கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; பல உயிர்கள் காவு வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்துச் சென்றவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.