இந்தியா

கணவன் மனைவி இடையே கட்டபஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம்

webteam

கணவன், மனைவி பிரச்னையில் 3வது நபர் கட்டபஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சக்திவாஹினி என்ற தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. அதில், வடமாநிலங்களில் பல பகுதிகளில் கணவன், மனைவி பிரச்னையில் 3ஆம் நபர் கட்டபஞ்சாயத்து செய்து தம்பதியை பிரிக்கும் பழக்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற கட்டபஞ்சாயத்துகளால்தான் ஆணவக் கொலைகள் அதிகளவில் நடப்பதால், அதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் ஏற்கனவே வாதங்கள் முடிந்த நிலையில், கணவன், மனைவி பிரச்னையில் 3ஆம் நபர் கட்டபஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், கட்டபஞ்சாயத்தை முறைப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவரை அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.