திருச்சியில் இயங்கும் ‘அன்புச் சுவர்’ ஒரு புதுமையான முயற்சி. மக்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு
தானமாக கொடுக்கவிரும்பினால் அவர்கள் இந்த அன்புச் சுவரில் கொண்டு வந்து வைக்கலாம். அதனை தேவைப்படுபவர்கள் எடுத்து
பயன்படுத்திக் கொள்ளலாம். ஏழை எளிய மக்களை மனதில் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்புக்கு பெரிய அளவில் ஆதரவுகள்
குவிந்தன.
இம்முறையை பின்பற்றி பல இடங்களில் இதேபோன்ற முயற்சிகளை பலர் முன்னெடுத்தனர். இதே மாதிரியான ஒரு புதிய முயற்சியை
தெலுங்கானா மாநிலம் முன்னேடுத்துள்ளது.
இந்தியாவில் மட்டும் ஒருநாளைக்கு ரூ.244 கோடி மதிப்பிலான உணவு பொருட்கள் பயன்படுத்தப்படாமல் கழிவாக குப்பைகளில்
கொண்டுபோய் கொட்டப்படுவதாக உலகளாவிய பசி அறிக்கை (Global Hunger Index) தெரிவிக்கின்றது. அதேபோல,
இந்தியாவில் தயாராகும் உணவுகளில் 40 சதவிகிதம் பயன்படாமல் போவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.
இந்தநிலையை மாற்ற ஹைதராபாத் நகராட்சி ஒரு புதிய வகை முயற்சியை எடுத்துள்ளது. அதாவது பொதுவான ஒரு குளிர்சாதனப்
பெட்டியை மக்கள் அதிகம் புழங்கும் பகுதியில் வைத்துள்ளது. இந்தப் பெட்டியில் மிஞ்சம் உணவு பொருட்களை கொண்டு வந்து யார்
வேண்டுமானாலும் வைத்துவிட்டு செல்லலாம். இந்தப் பெட்டியிலுள்ள உணவை தேவைப்படுபவர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்து
பசியாறிக் கொள்ளலாம். இதனால் உணவுப் பண்டங்கள் தேவையற்று கழிவுக்கூடைகளில் கொட்டப்படுவதை தடுக்கலாம். ஆகவே
இதனை செயல்படுத்தியுள்ளனர்.
இந்தப் பெட்டியை ‘ஆப்பிள்ஹோம்’ என்ற தன்னார்வு தொண்டு நிறுவனம் பராமரிக்கும் என்று ஹைதாராபாத் நகராட்சி தகவல்
தெரிவித்துள்ளது. இந்தப் பெட்டி மூலம் பசியைப்போக்கும் முயற்சியை ஹைதராபாத் நகராட்சி எடுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியையும் புகைப்படத்தையும் ஹைதிராபாத் மண்டல கமிஷ்னர் ஹரி சந்தனா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த முயற்சிக்கு அவர், 'BeatHunger' என்ற ஹேஷ்டேகையும் பதிவிட்டுள்ளார்.