மத்தியப்பிரதேச மாநிலம் ஹோஷங்கபாத் பகுதியை சேர்ந்தவர் ஷதாப் கான். பத்திரிகையாளராக பணியாற்றி வரும் அவர் லேப்ரடார் இனத்தை சேர்ந்த கருப்பு நிற வளர்ப்பு நாயை வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அதன் பெயர் ‘கோக்கோ’.
கடந்த ஆகஸ்ட் மாதம் கோக்கோ வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளது. இதையடுத்து அவர் நாயை காணவில்லை என போலீசில் புகாரும் கொடுத்துள்ளார். இந்நிலையில் அண்மையில் தனது நாயை அவர் மல்கேதி பகுதியின் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் தலைவரான கார்த்திக் ஷிவ்ஹரே வீட்டில் அதை பார்த்துள்ளார்.
உடனடியாக அது தனது நாய் என ஷதாப் அதற்கு உரிமை கொண்டாட ‘இது என் நாய் டைகர்’ என சொல்லியுள்ளார் கார்த்திக் ஷிவ்ஹரே. தொடர்ந்து போலீசில் இது குறித்து கடந்த 18 ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார் ஷதாப். அது தனது நாய் தான் என்பதற்கு அடையாளமாக படங்கள், ரசீதுகள், காணாமல் போன போது போலீசில் கொடுத்த புகார் என அனைத்தையும் அவர் கொடுத்துள்ளார்.
அதற்கு மறுநாளே கார்த்திக் ஷிவ்ஹரேவும் தனது நாயான டைகரை ஷதாப் உரிமை கொண்டாடுவதாக சொல்லி புகார் கொடுத்துள்ளார். மூன்று வயதான அந்த லேப்ரடார் இருவருக்கும் கட்டுப்படுவதால் குழம்பிய போலீசார் நாயை DNA பரிசோதனைக்கு உட்படுத்தப்பட. அதன் மூலம் உண்மையான உரிமையாளரை அடையாளம் காணலாம் எனவும் சொல்லியுள்ளனர்.