செயின் பறிப்பில் ஈடுபட்டு கடனில் பாதியை அடைத்த சாப்ட்வேர் இன்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, போலீசாரை கண்டதும் ஒருவர் வேகமாக பைக்கை திருப்பி தப்பிக்க முயன்றார். விரட்டிச் சென்று அவரை மடக்கிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் செயின் பறிப்பில் ஈடுபடும் சாப்ட்வேர் இன்ஜினீயர் பிரபாகர் என்பது தெரியவந்தது.
ஆந்திராவைச் சேர்ந்த இவர், பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தனியாக தொழில் தொடங்க நினைத்து நிருவனம் ஒன்றை ஆரம்பித்தார். இதில் எதிர்பார்த்த அளவு லாபம் வரவில்லை. பத்துலட்சம் ரூபாய் கடன் ஆகியது. கடனை அடைக்க என்ன செய்யலாம் என நினைத்தார். திருட்டுத் தொழிலில் ஈடுபட முடிவு செய்தார். அதன்படி தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பெங்களூரின் கோரமங்கலா, மடிவாலா, ஜெய நகர், ஜே.பி.நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் இதுவரை 25 பேரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதா கக் கூறியுள்ளார். அந்த பணத்தை வைத்து பாதி கடனை அடைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார், அவரை கைது செய்துள்ள போலீசார் அந்த நகைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவரே கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.