இந்தியா

விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜூ பஞ்சாப் பாஜக வேட்பாளரானார்

விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜூ பஞ்சாப் பாஜக வேட்பாளரானார்

கலிலுல்லா

டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜூ, பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சித்துவை எதிர்த்து அவர் களம் காண்கிறார்.

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையராக ஜக்மோகன் சிங் ராஜூ பணியாற்றி வந்தார். ஓய்வு பெறுவதற்கு ஓர் ஆண்டுக்கும் மேலாக உள்ள நிலையில், அவர் விருப்ப ஓய்வு கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஜக்மோகன் சிங் ராஜூவின் கடிதத்தை ஏற்று, விருப்ப ஓய்வுக்கு முன்னதாக 3 மாதங்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற விதியை தளர்த்தி, நேற்று முதல் ஓய்வுபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்திருந்தார்.

விருப்ப ஓய்வு பெற்ற நாளிலேயே, பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேதொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.