2019-ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1.49 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது
சாலை விபத்துகள் என்று வார்த்தையை கேட்காமல் ஒருநாள் கூட நகர்வதில்லை. சாலை விபத்துகளைத் தடுக்க மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் சாலை விபத்துகள் என்பது தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்நிலையில் சாலை விபத்துகள் குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 2019-ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1.49 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பட்டியலில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த மாநிலமாக உத்திரப்பிரதேசம் உள்ளது.
மொத்த உயிரிழப்புகளில் 15% உத்திரப் பிரதேசத்தில் நிகழ்ந்தவை. அதாவது கடந்த ஆண்டு அந்த மாநிலத்தில் மட்டும் 22,655 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு ராஜஸ்தான், ஒடிசா, பீகார், சத்தீஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்களில் அதிக இறப்புகளை கொண்ட மாநிலங்களாக இருந்தன.
புள்ளி விவரத்தின்படி டெல்லி, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 2018-ம் ஆண்டைக்காட்டிலும் 2019-ம் ஆண்டில் 227 இறப்புகள் குறைந்துள்ளன. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் 696 இறப்புகள் குறைந்துள்ளன.
கர்நாடகாவில் 673 இறப்புகள் குறைவாக பதிவாகியுள்ளன. கடந்த 10 வருடத்தை எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்துள்ளன. கிட்டத்தட்ட 10317 இறப்புகள் குறைந்துள்ளன. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்திய மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
தமிழகம் சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்குவதாகவும் உயிரிழப்புகளை குறைத்து வருவதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் 39% வரை உயிரிழப்புகள் குறைந்துள்ளன. 2015ல் 17,218 ஆக இருந்த உயிரிழப்புகள் 2019-ல்10,525 ஆக குறைந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சாலை பாதுகாப்புக்கான உச்ச நீதிமன்றத்தின் குழுவிடம் அந்தந்த மாநிலங்கள் குறிப்பிட்ட விவரத்தின் படி இந்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.