இந்தியா

ராஜ்நாத் சிங்குடன் பன்வாரிலால் ஆலோசனை: ஒகி நிதி வருமா?

ராஜ்நாத் சிங்குடன் பன்வாரிலால் ஆலோசனை: ஒகி நிதி வருமா?

webteam

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார்.

ஒகி புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் சூறையாடப்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, 50 படகுகளும், 433 மீனவர்களும் கரை திரும்பவில்லை என்ற புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பெருவாரியான மக்கள் வீடுகளை இழந்தும், வாழ்வாதரத்தை இழந்தும் அவதிப்பட்டு வருகின்றனர். மீனவர்களின் குடும்பங்கள் பெரும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். கன்னியாகுமரி பாதிப்பு குறித்து சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு மேற்கொண்டார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஒகி புயல் பாதிப்பு குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை செய்துள்ளனர். அத்துடன் தமிழகத்திற்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நிதிகள் குறித்து விவாதித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் ஒகி புயல் பாதிப்பிற்கான மத்திய நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.