இந்தியா

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு சொல்வது மிக மிக முக்கியம்: தமிழக அரசு

Sinekadhara

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கிலிருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் நசீர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீதிமன்ற வரம்பு, இயற்கை நீதி, ஒரு தலைபட்சம், தகுதியின்மை ஆகிய நான்கு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நாங்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை எதிர்க்கிறோம். மேலும், மருத்துவர்களை விசாரிக்கும் ஆணையத்தில் ஒரு மருத்துவ நிபுணர்கூட இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அப்போலோ நிர்வாகம் முன்வைத்தது.

இதற்கு தமிழக அரசு, "ஆறுமுக சாமி ஆணையம் ஓர் உண்மை கண்டறியும் ஆணையம். அதன் வேலை உண்மைத் தகவல்களை திரட்டி வழங்குவது மட்டும்தான். மேலும், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்க எந்த மறுப்பும் இல்லை. உச்ச நீதிமன்றம் விரும்பினால் அதனை செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனையில் இருந்து நாங்கள்தான் அந்த மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்போம். அதில் அப்போலோ தலையிடக் கூடாது என்று தெரிவித்தது.

மேலும், விசாரணை ஆணையம் தொடர்ந்து செயல்படுவது அவசியம்; ஆனால் அதன் செயல்பாட்டை அப்போலோ மருத்துவமனை தடுக்க நினைக்கிறது" என்று உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்தது. மேலும் "திரட்டப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் அரசு சட்டமன்றத்தில் கூடி முடிவெடுப்பார்கள்; ஏனென்றால் ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு உண்மையைக் கூறவேண்டியது எங்களது கடமை; அப்போலோ நிர்வாகம் என்ன மாதிரியான மருந்துகளை கொடுத்தார்கள்? என்ன மாதிரியான சிகிச்சை வழங்கப்பட்டது? என்பதுபோன்ற அடிப்படை தரவுகள் முழுமையாக வேண்டும். இதற்கு நிபுணர்கள் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் நீதிமன்றம் நினைக்கும்பட்சத்தில் மருத்துவர்கள், நிபுணர்கள் போன்றோரை இணைத்து இந்த ஆணையத்தை விரிவுபடுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றும் தெரிவித்திருக்கிறது.