இந்தியா

தமிழகத்தின் ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய்கள் திறமையானவை: பிரதமர் மோடி !

jagadeesh

முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றின் மூலம் கொரோனாவை வெல்ல முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"மனதில் உள்ளதைப் பேசுகிறேன்" என்ற வானொலி உரையில் பேசிய, அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலமே கொரோனா வைரஸை தோற்கடிக்க முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். வருகிற 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை குறிப்பிட்டுப் பேசிய மோடி, ஒவ்வொரு தனி மனிதனும் வாழ்க்கையில் வெற்றிபெறும்போது, நமக்கு கல்வி போதித்த ஆசிரியர்களை நினைவில் கொள்ள வேண்டும் என்று மோடி அறிவுறுத்தினார். நமது ஆசிரியர்களை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை போன்ற இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்கள் திறமையானவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப்பணிகளில் நாய்களின் பங்களிப்பு மகத்தானவை என்று கூறினார். கட்டட இடிபாடுகள் மற்றும் நிலநடுக்கத்தின்போது இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிவதில், ராஜபாளையம் மற்றும் சிப்பாய்பாறை வகை நாய்கள் தனித்திறமை வாய்ந்தவை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ராணுவ வீரர்கள் மட்டுமல்ல ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கு உறுதுணையாக இருந்துவரும் நாய்களும் உயிர்த்தியாகம் செய்து வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.தஞ்சை தலையாட்டி பொம்மைகள் குறித்துப் பேசிய பிரதமர், பல்வேறு மாநிலங்களில் பொம்மை தயாரிக்கும் தொழில்கள் சிறப்புப்பெற்று விளங்குவதாகப் பாராட்டினார். இந்தியாவில் தயாராகும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்று தனது வானொலி உரையில் பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார்.