இந்தியா

'2024ல் மம்தா பிரதமர், அபிஷேக் பானர்ஜி முதல்வர்' - ட்வீட்டை நீக்கிய திரிணாமுல் எம்.பி

Veeramani

2024ல் ஆர்எஸ்எஸ்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரால் மம்தா பானர்ஜி நாட்டின் பிரதமராகப் பதவியேற்பார், அப்போது மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக அபிஷேக் பானர்ஜி பதவியேற்பார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி அபரூபா போடார் ட்வீட் செய்தார். ஆனால், அவர் ஒரு மணி நேரத்திற்குள் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.

2036ல் மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜி முதலமைச்சராக வருவார் என்று திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் ட்விட்டரில் பதிவிட்ட ஒரு நாள் கழித்து, அபரூபா போடார் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். திங்களன்று, குணால் கோஷ் பதிவிட்ட ட்வீட்டில், "2036 வரை வங்காளத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருப்பார் என்று என்னால் கூற முடியும். 2036 ஆம் ஆண்டில், அபிஷேக் பானர்ஜி ( மம்தாவின் மருமகன்) முதலமைச்சராக பதவியேற்பார்” என்று தெரிவித்திருந்தார்.



தனது ட்வீட் குறித்து கருத்து தெரிவித்த போடார், “2024 இல் மம்தா பானர்ஜி பிரதமராக வருவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்பது உண்மைதான். மேற்கு வங்கம் கண்ட வளர்ச்சியை இந்த நாட்டில் பார்க்க விரும்புகிறோம். அப்படி நடந்தால், வெளிப்படையாக அபிஷேக் பானர்ஜி மாநிலத்தின் முதல்வராக வர வேண்டும்" என தெரிவித்தார்.

இந்த ட்வீட் குறித்து விமர்சித்த பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா, “முதல்வராக பதவியேற்க அபிஷேக் பானர்ஜி தயாராக இருக்கிறார், அதிகாரம் கிடைத்தால் நாளையே முதல்வராகி விடுவார். இது மம்தா பானர்ஜியை பதவியில் இருந்து அகற்றுவதற்காக அபிஷேக் பானர்ஜியின் ஆதரவாளர்களின் புத்திசாலித்தனமான பிரச்சாரம்" என தெரிவித்தார்