மம்தா பானர்ஜி எக்ஸ் தளம்
இந்தியா

மம்தாவுக்கு தொடர்ந்து பின்னடைவு.. ஒரேவாரத்தில் 3 எம்பிக்கள் காலி.. தகர்ந்த TMC கோட்டை!

தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர்.

Prakash J

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்ந்துவருகிறது. குறிப்பாக, அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் தங்கள் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் வெளியேறி வருகின்றனர். அந்த எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது. இதனால், மம்தாவுக்கு மேலும்மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பலத்த தோல்வியடைந்தது. மேலும், தாம் போட்டியிட்ட தொகுதியிலேயே அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியே தோல்வியடைந்தார். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதேநேரத்தில், தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு உள்ளது.

மம்தா பானர்ஜி

குறிப்பாக, அக்கட்சியின் 61 எம்எல்ஏக்கள் மம்தாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தவிர, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா, 61 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். இன்னொரு புறம் அவர் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களில் 28 பேரில் 20 பேரும் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த 2 மாநிலங்களவை எம்பிக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியிலிருந்து விலகி்னர்.

இந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த இன்னொரு எம்பியும் பதவி விலகியுள்ளார். அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. பிரகாஷ் சிக் பராக், நேற்று தனது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினார். சுகேந்து சேகர் ராய் மற்றும் சுஷ்மிதா தேவ் ஆகியோரின் பதவி விலகலைத் தொடர்ந்து இவரது விலகல் நிகழ்ந்துள்ளது. இதன்மூலம், ஒரேவாரத்தில் மாநிலங்களவையிலிருந்து விலகிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Prakash Chik Baraik

மேலும், பிரகாஷ் சிக் பராக் பதவி விலகியதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை பலம் 10 எம்பிக்களாகக் குறைய உள்ளது. இதற்கிடையே, அடுத்த வாரத்திற்குள் மேலும் மூன்று திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பிக்கள் பதவி விலகக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே மம்தா பானர்ஜி கட்சி நிர்வாகிகளால் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், மாநிலங்களவை எம்பிக்களின் பதவி விலகலும் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பதவி விலகல் குறித்து பிரகாஷ் சிங் பராக், ”வங்காள மக்களின் தீர்ப்பைக் கருத்தில்கொண்டே நான் பதவியிலிருந்து விலகினேன். இப்போது, ​​முதல்வர் (சுவேந்து அதிகாரி) சொல்வதை நான் செய்வேன்... பாஜக எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை” என்றார்.