மஹுவா மொய்த்ரா ட்விட்டர்
இந்தியா

மேற்கு வங்கம் | மஹுவா மொய்த்ரா மீது வீசப்பட்ட முட்டைகள்.. பின்னணியில் பாஜகவா?

20 மக்களவை எம்பிக்கள் பெயர் தெரியாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் (NCPI) இணைந்தது மம்தாவுக்கு மேலும் பின்னடைவைத் தந்தது.

Prakash J

மம்தாவின் கட்சியைச் சேர்ந்த எம்பியான மஹுவா மொய்த்ரா மீது முட்டைகள் மற்றும் கத்தரிக்காய்களை வீசியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவும் அவரது கட்சியும் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா (Ritabrata Banerjee), தன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். அதேபோல், 20 மக்களவை எம்பிக்கள் பெயர் தெரியாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் (NCPI) இணைந்தது மம்தாவுக்கு மேலும் பின்னடைவைத் தந்தது. இந்தச் சூழலில், மம்தாவின் கட்சியைச் சேர்ந்த எம்பியான மஹுவா மொய்த்ரா மீது முட்டைகள் மற்றும் கத்தரிக்காய்களை வீசியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணநகரில் உள்ள ஓர் உணவகத்தில் தனது கட்சித் தொண்டர்களுடன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ​​பாஜக குண்டர்கள் அந்த உணவகத்தின் மீது முட்டைகளையும் கத்திரிக்காய்களையும் வீசியதாக மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

மஹுவா மொய்த்ரா

அவர்கள் கட்டடத்திற்கு வெளியே கூடி, கருப்புக் கொடிகளைக் கைகளில் ஏந்தி, ‘திரும்பிச் செல்’ என்ற முழக்கங்களை எழுப்பியதுடன் அந்தக் கட்டடத்தின் மீது முட்டைகளையும் கத்தரிக்காய்களையும் வீசும் காணொளிக் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவர்கள், தொடர்ந்து ஜன்னலை நோக்கி முட்டைகளையும் கத்தரிக்காய்களையும் வீசியெறிந்தபோது, ​​மொய்த்ரா ஒரு திரையைப் பயன்படுத்தி தன்னைத் தற்காத்துக் கொள்வதும் காணொளியில் தெரிகிறது.

இதுகுறித்து அவர், “மாநிலத்தில் இதுதான் சட்டம் ஒழுங்கு நிலைமை. இவர்கள் யாரும் சாதாரண குடிமக்கள் அல்ல; இவர்கள் பாஜக குண்டர்கள். இதுதொடர்பாக நான் டிஜிபிக்கு புகார் செய்தேன். ஆனால் அவர்கள் வந்தும் சும்மா உட்கார்ந்து வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதை இந்தியா முழுவதும் பார்க்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடைய முகங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால், அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று காவல்துறை பின்னர் கூறும்” எனத் தெரிவித்துள்ளார்.

மஹுவா மொய்த்ரா

பின்னர், மேற்கு வங்க காவல்துறைத் தலைவரைக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "கடந்த 2 மணி நேரமாக... உங்கள் காவல்துறை இந்தக் கொண்டாட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறது, கூட்டத்தைக் கலைக்கவில்லை. நான் தப்பி ஓட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், நான் என் காரில் ஏறும்போது என்மீது முட்டைகளையும் கற்களையும் வீசுவார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான மக்களின் கோபம் தணியவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது மக்கள் முட்டைகளை வீசி வருகின்றனர். தவிர, பொது இடங்களில் ‘திருடன்’ என அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Mahua Moitra

இருப்பினும், இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது தொடர்ச்சியாக முட்டைகள் வீசப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பாஜக தலைமையிலான மேற்கு வங்க அரசை கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது குறிப்பிடத்தக்கது. எனினும், அந்தச் சம்பவம் மீண்டும் அரங்கேறியிருப்பது மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.